healthier society

ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி வல்வெட்டித்துறை........

மனிதன் ஒரு சமூகப்பிராணி என அரசியல் விஞ்ஞானம் கூறுகின்றது. தனிமனிதன், குடும்பம், சமூகம், தேசியம் எனும் நான்கு நிலைகளில் மனிதவாழ்கையை சமூகவியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இந்நான்கு நிலைகளில் இருந்தும் ஒவ்வொருமனிதனும் தன்னையும் தனது செயல்களையும் மதிப்பீடு செய்துகொள்ளலாம். செயல்கள் சிந்தனையைத் தொடர்ந்து வரவேண்டும் அவைகளே ஆரோக்கியமான செயல்களாக பின்பு உருவகம் கொள்கின்றன. இவ்வகையில் மூன்றாம் நிலையில் காணப்படும் சமூகம் என்பதனை ஆரோக்கியமான செயல்களுடன் இணைக்கும் போது ஆரோக்கியமான சமுதாயம் மலர்கின்றது.
பொதுவாகவே ஒரு நெருக்கடி உருவாகும்போது அதனின்றும் தப்பித்துக்கொள்ள அதற்கு முந்தைய காலத்திற்கு திரும்பும் எண்ணமே எல்லோர்கும் வரும். ஆனால் நடைமுறையில் காலத்திற்கு ஏற்ப யாவையுமே மாறிவிட்டிருக்கும். இதனால் பழையவாழ்கைமுறை, பழையஇலட்சியங்கள், பழையநடைமுறைகள் திரும்பவும் நிலைபெறவேண்டும் என எண்ணுவதை விடுத்து காலத்திற்கு ஏற்ப எம்மை நாமே புதிதாய் நிர்மாணம் செய்து கொள்ளவேண்டும். இன்றையவாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளிற்கு அமைதியான தீர்வைப் பெற்றுக்கொண்டு வரும் எங்களுடைய புதியதலைமுறைக்கு ஒற்றுமை. அமைதி, சுதந்திரம் நிறைந்த சமுதாயத்தை விட்டுச்செல்வதே எமது கடமையாகின்றது.

            வல்வெட்டித்துறை......சொல்லவே இனிக்கும்!.... இச்சொல்லின் பின்னே எத்தனையோ கதைகளும் கனவுகளும் எதிர்பார்புக்களும் ஏக்கங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் ஏனைய மனிதர்களைப் போலவே வாழவேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றமுடியாமல் ஓர் இடைவிடாத போராட்டம் வெவ்வேறு வகையில் காணப்படுகின்றது. இது உலகில் எல்லா மனிதருக்கும் பொதுவானது. ஆனால் எமது நிலையோ வித்தியாசமானது. ஒரு குடும்பமாய் ஒன்றுபட்டிருந்த எமது சமூகம் தேசியம் என்னும் சூறாவளியால் சிதறுண்டு போனது. பல குடும்பங்களின் இணைவே சமூகம் எனப்படுவது. பல சமூகங்களின் இணைப்பினால் தேசியம் உருவாக்கப்படுகின்றது. ஆனால் வல்வெட்டித்துறையில் ஒரு குடும்பமே ஓரு சமூகமாக காணப்பட்டது. இங்குதான் நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றோம். இதனாலேயே மற்றவர்களிற்கு வழிகாட்டவும் ஓரு தேசிய இனப்பிரச்சனைக்கு நம்பக்கையூட்டி அதனூடாக ஓருஇனத்திற்கு தலைமையேற்கவும் எம்மால் முடிந்தது. ஏனெனில் தேவை என வரும்பொழுது 'எங்களுடைய' என ஒன்றுபட்ட உணர்வில் நாம் உடனடியாகவே ஒன்று சேர்ந்தோம். இது மற்றைய சமூகங்களில் காணமுடியாத தனித்துவமானதும் இயற்கையிலே எமக்குக் கிடைத்த சிறப்பியல்புகளில் ஒன்றுமாகும்.

             இன்று தலைமையேற்று வந்த நாம் சிதைந்த நிலையில் தனித்து விடப்பட்டிருக்கின்றோம். சொந்தமண்ணாம் வல்வெட்டித்துறையில் 'நான் வல்வெட்டித்துறை' யான் என வாழ்ந்து கொண்டிருப்பவர்களைவிட பிரித்து நோக்கினால் இலண்டனிலும் கனடாவிலும் தமிழ்நாட்டிலும் வாழும் வல்வையரின் தொகை மிக அதிகமாக காணப்படுகின்றது இதனைவிட நாம் புலம்பெயர்ந்து வாழும் எட்டு நாடுகளில் காணப்படும் வல்வையின் நலன்புரிச்சங்கங்களும் இவைகளை ஒன்றிணைக்கும் தாய்நில 'வல்வெட்டித்துறை ஒன்றியமும்' அவுஸ்ரேலியா, இலண்டன், டென்மார்க்  ஆகிய நாடுகளில் இயங்கிவரும் ஊருக்கான இணையத்தளங்களும் உலகளாவிய வல்வையரை ஒன்றிணைக்கும் வல்வைக்கான valvai.com இணையத்தளமும் பொருளாதாரம் என்பதற்கு அப்பால் வல்வெட்டித்துறை என்ற எமது உயிரினும் மேலான ஊர் உணர்வைத் தொடாந்து தாங்கும் தூண்களாக கடமையாற்றுகின்றன.

இன்று பல மேற்போக்கான ஆய்வாளாகளும் போர்க்கால சூழ்நிலையை முப்பது வருடகாலமாகவே கணிப்பிடுகின்றனர். ஆனால் எமதுமண்ணில் சுதந்திர காலத்தில் இருந்தே மக்களின் மனநிலையும் சமூகப்பின்புலமும் பெரும் மோதல் உருவாகும் வாய்பினை எப்பொழுதும் தோற்றுவித்தவாறே நகர்ந்து வந்துள்ளது வெளிப்படையானது. நாற்பது வருடங்களிற்கு முன்பே அதற்கான தயார்ப்படுத்தலில் எமதுமண் ஈடுபட்டிருந்தது வரலாறு தரும் செய்தியாகும். சமூகத்தின் பொருளாதாரம் உயர்நிலையில் காணப்பட்ட அக்காலத்தில் 'ஆரேக்கியமான சமுதாயம்' என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. ஆனால் நாற்பது வருடங்களின் பின்னால் சிதைந்த நிலையில் இன்று காணப்படும்  வல்வெட்டித்துறையை எதிர்காலத்தில் 'ஆரேக்கியமான சமுதாயம்' ஆக கட்டியெழுப்பவேண்டிய பெரும்பணி எம்முன்னால் காத்துக்கிடக்கின்றது.

பாரம்பரிய பெருமைமிக்க வல்வெட்டித்துறை ஆரேக்கியமான சமுதாயமாக மாற்றமடைய வேண்டுமெனில் கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம், போக்குவரத்து, தொழில்வாய்ப்புகள் என்பன எமது மண்ணில் நிறைவான தாக்கப்படவேண்டும். அதேவேளை இத்துறைகள் யாவும் விரிபுபடுத்தப்படவும் நவீன மயப்படுத்தலுக்கும் உட்படவேண்டும். இவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதியானபொருளாதார பின்புலமும் அது தளம்பாதிருக்க சரியான திட்டமிடலும் தேவைப்படும். இதற்கு சரியான அறிவூட்டல் அவசியமாகின்றது. அறிவு என்பது பெறப்படும் கல்வியிலும் கூடிய பயிற்சியினாலுமே கிடைக்கின்றது. இவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படும் இவைகளினூடாகவே வளர்ச்சிபெற்ற சமுதாயம் ஒருபுறத்தில் உருவாகும். அதேவேளை மறுபுறத்தில் எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமயம் என்பன தொடர்ந்து பேணப்படவேண்டும். இவ்வாறே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகின்றது. 'அறிவும் ஆற்றலும் நற்குணமும் பண்பாடும் கொண்ட சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம்'என சமூகவியலாளர்கள் வரையறை செய்துள்ளனர்.

இத்தகைய சமூகத்தின் அங்கமான தனிமனிதர்களிடம் அன்பு, நேர்மை, கூட்டுறவு, பொறுப்புணர்வு, மனிதநேயம், மரியாதை, அமைதி, ஒற்றுமை, எளிமை, சுதந்திரம், தனித்துவம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. எதையும் உறுதியாக பிரதிபலிக்கும் தன்மை இவைகளுடன் நிறைந்தமனமும் காணப்படும். இத்தகைய நற்குணங்களுடனேயே வல்வெட்டித்துறை மக்கள்  என்றும் காணப்படுகின்றனர். இத்தகைய சமுதாயத்திற்கு முன்கூறிய கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம். போக்குவரத்து, தொழில்வாய்புகள் என்பவற்றை முழுமையாக ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் எதிர்கால வல்வெட்டித்துறையை ஆரோக்கிய சமுதாயமாக மாற்றவேண்டும்.

நேரியதிட்டமிடல் மற்றும் திறந்த பொருளாதார கொள்கையுடன் (எவ்வகையிலும் வல்வெட்டித்துறையை நோக்கிய பொருளாதார வளங்களையும் உதவிகளையும் ஒன்று குவித்தல்) வல்வெட்டித்துறையை ஆரோக்கியசமுதாயமாக மாற்றும் முயற்சியை VDAG எனப்படும் வல்வெட்டித்துறையின் அபிவிருத்திக்கான செயற்குழு அறிமுகப்படுத்தி முன்னெடுத்து வருகின்றது. பொருளாதாரத்தைப் பற்றிய விடயங்களே உலகில் அதிசக்தி வாய்ந்தவையாக காணப்படுகின்றன. இதன் மூலமே ஏனைய தேவைகள் பூர்தியாக்கப்படுகின்றன. இதன்காரணமாக தளம்பாத (Stable) பொருளாதார வலுக்கொண்ட சமூகமாக வல்வெட்டித்தறையை முதலில் உருவாக்குவதே இதற்கு அடிப்படையாகின்றது. நாமும் இப்பாதையில் பயணிப்பதன் மூலமே ஒற்றுமை, நீதி, விடுதலைஉணர்வு நிறைந்த சமுதாயத்தை எதிர்கால வல்வெட்டித்துறைக்காக விட்டுச்செல்ல முடியும். (தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்)

உங்களின் வல்வை.கொம்

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com