பொன்மனச் செல்வர் பொன்.வல்லிபுரம் ஐயா

Thursday, 03 February 2011 09:40

thinakural

மயூரபதி ஆலய அறங்காவலரின் மறைவு ஆன்மீக உலகிற்கு பேரிழப்பாகும்

Thursday, 03 February 2011 10:05

கொழும்பு வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் அறங்காவலராக விளங்கிய பொன்.வல்லிபுரம் அவ்வாலயத்தைக் கட்டியெழுப்ப அரும்பாடுபட்டவர். ஆன்மீகப் பணிகளில் முன்னின்றவர். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிகளுக்கு எப்போதும் உறுதுணையாக விளங்கியவர். அன்னாரின் மறைவு ஆன்மீக உலகிற்குப் பேரிழப்பாகும்' இவ்வாறு மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலய அறங்காவலர் பொன் வல்லிபுரம் அவர்களின் மறைவுக்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வல்லிபுரம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சமயத்துறைக்கென ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு முதலாவது அமைச்சராக விளங்கிய செல்லையா இராஜதுரை முன்னெடுத்த முதலாம் உலக இந்து மாநாடு அஸ்வமேத யாகம், மகா ருத்ர யாகம் போன்ற செயல் திட்டங்களிலும் தீவிர பங்கு கொண்டு ஈடுபட்டவர். பின்னர் இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சராக விளங்கிய பி.பி.தேவராஜ் காலத்தில் நடத்தப்பட்ட ஆன்மீக மேம்பாட்டுக் கருத்தரங்குகள், சமய விழாக்கள் என்பவற்றிலும் பெருவிருப்புடன் பங்குகொண்டு செயற்பட்டவர். மேலும் இந்துசமயத் திணைக்களத்தின் செயற்பாடுகளுள் ஒன்றான இந்துப் பண்பாட்டு நிதியத்தின் உறுப்பினராகவும் நியமனம் பெற்று நிதியத்தின் பணிகளை ஊக்குவித்தார்.

அமரர் ஜி.மகேஸ்வரன் இந்துசமய விவகார அமைச்சராகப் பணிபுரிந்த காலத்தில் அவர் முன்னெடுத்த இரண்டாம் உலக இந்து மாநாடு தேசிய தீபாவளிப் பண்டிகை போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுதவியவர். இவை தவிரவும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்தும் அறநெறிப் பாடசாலைக் கருத்தரங்குகள் ஏனைய பயிற்சிப்பட்டறைகள் என்பவற்றை சிறப்புற நடாத்த ஊக்கமளித்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் சிறியதொரு ஆலயமாக இருந்த மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை பல்வேறு வழிகளிலும் சிறப்புற வளர்த்தெடுத்து இந்து மக்கள் பெரும் நம்பிக்கையோடு வழிபட உயர்த்திய பெருமை அவரையே சாரும். ஆலயத்திற்கென பஞ்சரதங்களை உருவாக்கி அவற்றை வருடந்தோறும் வீதியுலா வரச்செய்து இந்துமக்களின் மத்தியில் பக்தியைப் பரப்பப் பெரிதும் துணை நின்றார். அவ்வாறே அம்மன் ஆலய பாற்குடப் பவனியும் தொடர்ச்சியாக நடைபெற உதவினார். ஆலயத்தை வளர்த்தெடுத்தது மட்டுமன்றி சிறந்ததோர் கலாசார மண்டபத்தையும் உருவாக்கினார். அதனுடன் தெய்வீக வடிவங்களைக் கொண்ட கண்காட்சிக் கூடமொன்றையும் ஏற்படுத்தி வைத்தார். அவை இன்று பலருக்கும் உதவத்தக்கனவாக விளங்குகின்றன.

ஆலயங்கள் தோறும் அறநெறிப் பாடசாலைகள் என்ற அரசின் கொள்கைத் திட்டத்திற்கமைய நாடு பூராகவும் ஆலயங்கள் மற்றும் இந்துசமய நிறுவனங்களில் அறநெறிப் பாடசாலைகள் உருவாவதை திணைக்களம் ஊக்குவிக்கின்றது. அந்த அடிப்படையில் மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் அறநெறிப் பாடசாலையை உருவாக்கி மாணவர்களை ஊக்குவித்ததோடு வருடந்தோறும் கலைவிழாக்களை நடத்தினார். மேலும் மாணவர்களுக்குரிய இலவச சீருடை, மதிய உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு என்பவற்றையும் வழங்கியுதவினார். மற்றும் மாணவர் உயர்வு கருதி நடனம், சங்கீதம் போன்ற வகுப்புகளையும் ஏற்பாடு செய்து உதவினார்.

வல்லிபுரம்  தலைநகரில் நடக்கும் அனைத்து சமய விழாக்களிலும் முக்கிய வைபவங்களிலும் தவறாது பங்கேற்றதோடு சிறந்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுதவியவர். இவைதவிர ஏனைய ஆலயங்களின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் தன்னாலான உதவிகளைச் செய்து ஊக்குவித்தவர். இங்ஙனம் இறை நம்பிக்கை மிக்கவராகவும், சாதனையாளராகவும் விளங்கிய பொன். வல்லிபுரம் ஐயா சில காலம் நோயுற்றிருந்த பின்னர் அமரத்துவமடைந்தமை ஆன்மீக உலகிற்குப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது துணைவியார், மக்கள் மற்றும் அவர் மீது அன்பும் பற்றும் கொண்டிருந்த அனைவருக்கும் எமது திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரது சார்பிலும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்  வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com