கொழும்பு மயூரபதி அம்மன் ஆலயத்தில்
வல்வை மைந்தன் திரு.பொன்.வல்லிபுரம் அவர்களின் தொண்டு
ந.நகுலசிகாமணி.
கனடா வல்வை வரலாற்று ஆவண காப்பகம்.
திரு.வல்லிபுரம் அவர்கள் பொன்னுத்துரை தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்தமகனாக பிறந்தார். இவர் நான்கு ஆண்டு காலம் புகையிரத இலாகாவிலும், 36 ஆண்டு காலம் சுங்க இலாகாவிலும் பணிபுரிந்தவர். இவர் சுங்க இலாகாவில் பணிபுரியும் காலத்தில் என்போன்ற வல்வை இளைஞர்கள் வெளிநாட்டு வர்த்தகக் கப்பலில் வேலை செய்துவிட்டு தாயகம் திரும்பும்போது தம்மால் இயன்ற உதவியும் புரிந்தவர். பலவருடங்கள் கொழும்பு இந்து மாமன்ற தலைவராகவும், வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவராகவும் செயலாற்றியவர். 1966ம் ஆண்டு திரு.பொன் வல்லிபுரம் அவர்கள் செயலாளராக கடமை ஆற்றிய நேரம் சிதம்பரா பாடசாலையில் இரு பெரிய மாடிக்கட்டிடம் ஆரம்பிக்க முடிவானபோது கொழும்பு ராஜ் “நகைச்சுவை நாடக மன்றத்தினரின்” நாடகங்கள் இரண்டினை நடாத்தி நிதிசேர்த்தும் தனது பணியை திறம்பட ஆற்றியிருந்தார்.
வல்வை முத்துமாரி அம்மனின் தொண்டன். அம்பாள் திருவிழா உபயகாரராகவும் உள்ளவர். அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் செய்யும் தென்னிந்தியக் கலைஞர்களான சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரை வல்வைக்கும் அழைத்து எமக்கும் பார்க்கும் சந்தர்ப்பங்களை வழங்கியவர். வல்வை சிவ.ஆறுமுகம் அவர்கள் வல்வை ஆலயங்களின் மீது பாடப்பட்ட பக்திப் பாடல்களை தென்னிந்திய பாடகர்களினால் பாடவைத்து ஒலிநாடாக்களில் வெளியிட்டு எமக்குத் தந்தவர். உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக கொழும்பிலிருந்தவாறே தான் பிறந்து வாழ்ந்த வல்வெட்டித்துறை மண்ணுக்கு தன்னால் இயன்ற சேவையை இறுதிவரை செய்த பெருமகன் திரு.வல்லிபுரம் அவர்கள்.
மயூரபதி அம்மன் ஆலயத்தில் 22 வருடங்கள்
மயூரபதி அம்மன் ஆரம்பத்தில் சிறு தகரக் கொட்டகையாயிருந்து, 1987ம் வருடம் கும்பாபிஷேக நாள் நியமிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மூர்த்திகள் மகாபலிபுரத்திலிருந்து வந்து சேரவில்லை. கும்பாபிஷேகம் செய்வதற்கு குருக்களும் ஒழுங்கு செய்யவில்லை. என்பதை அறிந்து அம்பாளின் அழைப்பை ஏற்று கொழும்பு மாநகரில் “மயூரா பிளேஸ்” மயூரபதி அம்மனிடம் காலடி எடுத்து வைத்தவர் திரு.வல்லிபுரம் அவர்கள். ஆலய பரிபாலன சபையினர் ஒரு வீட்டுக்கும் ஒரு நாட்டுக்கும் ஒரு தலைவன்தான் அதன்படி அனைவரது ஒத்துழைப்போடும் நிதிப்பொறுப்பு, நிர்வாகப் பொறுப்பு, கலாச்சாரப் பொறுப்பு, நித்திய நைவேத்தியப் பொறுப்பு அனைத்தையுமே திரு.வல்லிபுரம் அவர்களிடம் கையளித்தனர். முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் திரு.செ.ராசதுரை அவர்களின் உதவியினால் விக்கிரகங்கள் எல்லாம் தருவிக்கப்பட்டு கும்பாபிஷேகம் 25-11-87 அன்று கோலாகலமாக நடைபெற்றச் செய்தார். அதன்பின்பு ஆலயத்தில் ஆடிப்புர லட்சஅர்ச்சனை, பௌர்ணமியில் சுமங்கலிப்பூசை, ஆடிப்பூரத்தில் பாற்குடப் பவனி 2000 மேற்பட்ட பெண்கள் பாலாபிஷேகம் செய்வது, சித்திரத்தேர், சமுத்திர தீர்த்தம் போன்றவை பிரபல்யமான திருவிழாக்களாகும்.
திரு.பொன்.வல்லிபுரம் அவர்கள் ஆலயப்பணியில் அறப்பணியும் செய்யவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு பண்ணிசை, திருமுறை, தையல், பொதுஅறிவுப் பாடங்களும் குழந்தைகளுக்குப் போதிக்கப்படும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படியாக ஆலயத்தை நிர்வகித்து கல்யாணமண்டபம், கலைக்கூடம், நிர்வாகசபை, இந்துசமயப் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கிய 5 மாடிக்கட்டிடத்தை பூர்த்தி செய்தது அவருடைய சேவையின் சிறப்பான அம்சமாகும். முதல்மாடியிலுள்ள சுப்பம்மாள் கல்யாண மண்டபம் அமைச்சர் திரு.சௌ.தொண்டைமான் அவர்களினாலும், கலைக்கூடத்தை செவா லியர்.சிவாஜிகணேசன் அவர்களை வரவழைத்து கோலாகலமாக திறந்துவைப் பித்தார்.
மீண்டும் அம்மன் அடிமை எனக் கசிந்துருகும் 'சிவபணிமாமணி' பொன்.வல்லி புரம் ஜே.பி அவர்கள் ஸ்ரீபத்திரகாளி அம்மன் தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்தை மிக விமர்சையாக 09-11-2000 அன்று மீண்டும் நிகழ்த்துவித்தார். கும்பாபிஷேக பெருவிழாவின் போது 551 பக்கங்களை உள்ளடக்கிய கும்பாபிஷேகமலரின் உள்ளடக்கத்தில் ஈழத்திலும் இந்தியாவிலும் உள்ள சக்தி தலங்களின் வரலாறுகளை வெளிவரச் செய்துள்ளார்.
கொழும்பு 'மயூரபதி பிளேஸ்' என்னும் பகுதியில் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் தகரக்கொட்டிலினுள் வீற்றிருந்து அருள்பாலித்த அன்னை இன்று உலகெல்லாம் பரந்திருக்கும் இந்துக்களின் உள்ளங்களில் வீற்றிருக்கின்றாள் என்றால் அதற்கு மூலகர்த் தாவாக அமைந்தவர் அம்பிகையின் பூரண அருளைப்பெற்ற தர்மகர்த்தா பொன்.வல்லிபுரம் ஐயா என்றால் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வர். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு புலம்பெயர்ந்த வல்வை மக்களும், கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
உசாத்துணை நூல்கள்
1. 'மயூரரமங்கலம்' கொழும்பு மயூரபதி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கும்பாபிஷேக மலர்.
2. 'வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்', ந.நகுலசிகாமணி (பக்கம் 115)
3. 'சிதம்பராக்கல்லூரி நூற்றாண்டுவிழா மலர்' (1896 – 1996)
*************