குச்சம் வைத்தி அண்ணாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

vaithy

குச்சம் வைத்தி அண்ணாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி்

theiva

வல்வெட்டித்துறையின் பாரம்பரியத்தையும் பெருமைகளையும் உலகளாவிய ரீதியில் எடுத்துக் காட்டுவதற்கு இன்று ஒருசிலரே எம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் அவர்களும் கூட எவ்வித ஆரவாரமுமின்றி, மிக அமைதியான முறையில் இருந்து எமது மண்ணுக்கும் மக்களுக்கு எவ்வித சுயநலமோ  கருதாது, அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் 'வைத்தி அண்ணா' என்று எம்மவர்களால் செல்லமாக அழைக்கப்டு வரும், நடராசா இராமச்சந்திரன் அவர்கள் திடீரென அமரத்துவம் அடைந்த செய்தி கேட்டு வல்வெட்டித்துறை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வல்வெட்டித்துறை இந்திய இலங்கை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்களினால் யுத்த நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, கடற்றொழிலாளர் குடும்பங்கள் அச்சத்துடன், கடலுக்குச் செல்லாது, தொழிலின்றி வாடிய வேளையில் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி அவர்களுக்கு ஒரு பலமாகவும், அவர்கள் சார்பில் பேரம் பேசும் சக்தியாகவும் செயற்பட்ட வைத்தி அண்ணாவின் துணிச்சலையும் எமது மக்களுக்காக நியாயத்தைப் பேசும் வல்லமையையும் நேரில் பார்த்தவன் என்ற  வகையில் அவரைப் போன்ற ஒருவரை நாம் இனிமேல் சந்திக்கமுடியாது.

இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்தவேளையில் அப்பாவி மக்களைத் தூண்டும் வகையில் வாய் வீரம் பேசுபவர்கள்  நாட்டைவிட்டு ஓடிய நிலையில், கடற்றொழிலாளர்களின் நலன்கருதி வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவுடன் இணைந்து அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், அடையாள உண்ணாவிரதங்கள், இந்திய இராணுவத்தினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருந்ததால், அவர்களது அராஜகங்கள் உலகின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதன் விளைவாக,வடமராட்சியின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தமது தொழில்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் பிரதான பங்காளியாக விளங்கினார் என்பதை அந்தக் காலப் பகுதியில் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் அறிவார்கள். அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக புலம் பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபொழுது, வன்னிக்குச் சென்று அங்கும் கடற்றொழிலாளர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுத்து வந்தமையையும் மறந்துவிடமுடியாது.

பின்னர் அங்கிருந்து தனது பிள்ளைகளின் அழைப்பின் பேரில் கனடாவுக்குச் சென்றபோதும், வல்வெட்டித்துறை மக்களை மறந்துவிடாது, அவ்வப்போது அவர்மேற்கொண்டுவந்த பாரிய உதவிகளை யாரால் மேற்கொள்ளமுடியும்? வல்வெட்டித்துறையின் கல்வித் தரம் குறைந்து வருதையும்,வல்வெட்டித்துறையின் வளம் மிக்க இளைஞர் அணி  தீய சக்திகளால் தவறான முறையில் வழி நடத்தப்படாதும் இருக்கவேண்டுமென்பதற்காக குச்சம் வாணி படிப்பகத்தின் மூலம் நடத்தப்படுகின்ற கல்விச் செயற்பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதுடன் அதற்கு வேண்டிய நிதியைச் சேகரித்துக் கொடுப்பது மட்டுமல்லாது, அதில் நான் ஆற்றிவருகின்ற கல்விச் சேவைகளை நன்றியுடன் பாராட்டி, அவை தொடர்பான முன்னேற்றங்களை என்னுடன் தொலைபேசி மூலமாக அடிக்கடி  கதைத்து வந்த வைத்தி அண்ணாவின் குரல் இன்று மௌனித்துவிட்டது என்பதை நினைக்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கின்றது.

ஒரு காலத்தின் பதிவாக வைத்தி அண்ணாவின் சேவைகள் எமது மண்ணின் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவர் இன்றும் வாணி படிப்பகத்தின் வளர்ச்சிக்காகவும்,சைனிங்ஸ் விளையாட்டுக் கழக வளர்ச்சிக்காகவும் ஆற்றி வந்த சேவைகள் தொடரப்படும் பொழுது தான் அன்னாரது ஆன்மாவும் அமைதி அடையும். அவரது பணி அவர்களது,சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்மற்றும் நண்பர்கள் உறவினர்களால் தொடரப்படவேண்டும்.

அன்னாரதுபிரிவால் துயருறும் அவரது மனைவி, சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், குச்சம் சமுகம் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆதமா சாந்தி அடைய ஆண்டவனைப் பிராத்தித்துக்கொள்கிறேன்.


நடராஜா அனந்தராஜ்,
நகர பிதா,வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com