வல்வெட்டித்துறையின் வரலாறு ஒன்றின் அஸ்தமனம்:  கணித ஆசான் குமாரசிறிதரனுக்கு நெஞ்சம் கனத்த அஞ்சலி

theiva

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 25.03.2014

வல்வெட்டித்துறையின் வரலாறு ஒன்றின் அஸ்தமனம்:  கணித ஆசான் குமாரசிறிதரனுக்கு நெஞ்சம் கனத்த அஞ்சலி

“சிறிதரன் மாஸ்ரர்” என்று கல்வி உலகத்தில் பெருமையுடன் பேசப்பட்டுவந்த பாலசுப்பிரமணியம் குமாரசிறிதரன் அவர்கள் தனது 66 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தியை தொலைபேசி வழியாக அறிந்ததும், ஒரு கணம் அதிர்ந்து விட்டேன்.
1970 களில் வல்வெட்டித்துறையின் கல்விப் பாரம்பரியத்தை மீண்டும் ஒரு உன்னத நிலைக்குக் னாண்டு வரவேண்டுமென்று துடிப்புடன் செயற்பட்டவர்களில் அமரர் குமார சிறிதரன் அவர்களின் பங்கு அளப்பரியது.

வல்வை சிவகுரு வித்தியாலயம், பருத்தித்துறை காட்லிக் கல்லூரி ஆகிய கல்விச் சாலைகளின் புகழ்பூத்த பழைய மாணவராக இருந்து, கணிதபாடத்திற்கான ஆசிரியராகப் பதவியேற்று, புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேச மாணவர்களின் கல்வி உயர்வுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து இலங்கையின் புகழ் பெற்ற கணித ஆசிரியர் என்ற பெருமையையும் பெற்றவர். பின்னர் வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் கணித ஆசிரியராக மிக அற்புதமாகச் சேவயாற்றிய சிறிதரன் மாஸ்ரர் அவர்கள் வல்வெட்டித்துறை மண்ணின் கல்வி வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்து, உழைத்து மாணவர்களினதும் பெற்றோரினதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசானாக விளங்கினார்.

குமார சிறிதரன் மாஸ்ரர் அவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் எவ்வளவுக்கு ஆர்வம் காட்டியிருந்தாரோ அந்த அளவுக்கு விளையாட்டுத்துறையிலும், ஆர்வம் காட்டியிருந்தார். வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியபொழுது, மாணவர்களை விளையாட்டுத்துறையிலும் வளர்த்தெடுப்பதில், பயிற்சிகளையும் வழங்கி வந்தார். மாணவர்களின் கல்வி   அபிவிருத்திக்குச்                சமனாக விளையாட்டுத்துறையிலும், அவர் அக்கறையுடன் செயற்பட்டு, மாணவர்களுடன், மைதானத்தில் தானும் ஒரு விளையாட்டு வீரனாக ஆர்வத்துடன் இயங்கியதால், மாணவர்களின் அன்பைப் பெற்றிருந்தார். அதேவேளை அவர் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் திகழ்ந்தார் என்பது, அவரது பன்முக ஆளுமையையும் எடுத்துக் காட்டுகின்றது.

1978 காலப் பகுதிகளில் வல்வெட்டித்துறையின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்து கொண்டு வந்த நேரத்தில் எமது ஊரின் கல்வி அபிவிருத்தியை மீண்டும் ஏற்படுத்தவேண்டுமென்ற விழிப்புணர்வு கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர் மட்டத்திலும் ஏற்பட்டபொழுது, 1977 ஆம் ஆண்டு கல்வி அபிவிருத்தியில் அக்கறை கொண்டு எமது குழந்தைகளின்  கல்வியை மேம்படுத்தவேண்டுமென்ற நோக்கில் எங்களில் சிலர்  ஒன்றிணைந்து வல்வெட்டித்துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் மாலை நேரம் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் க.பொ.த.சாதரண தரம், க.பொ.த. உயர்தர வகுப்புகளை இலவசமாகவே நடத்தி வந்தோம். இந்தச் சேவையில் பணியாற்றியவர்களில்  குறிப்பிடத்தக்கவர்களாக காலஞ்சென்ற மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அமரர் ந.யோகசிகாமணி, மற்றும் அமரர் பா.குமாரசிறிதரன் ஆகியோரைக் குறிப்பிடலாம். அந்த வகையில் திரு.குமாரசிறிதரன் அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றியமை ஒரு முக்கியமான காலத்தின் பதிவாகும். ஆயினும் எதையும் இலவசமாக வழங்கினால் அதற்கான பெறுமதியும் குறைந்து விடும் என்பதை  நாங்கள் உணர்ந்ததன் வெளிப்பாடே  “வல்வைக் கல்வி மன்றத்தின் தோற்றமாகும்”. 1978 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி “கல்வியே செல்வம்” என்ற மகுட வாசகத்துடன், எமது பிள்ளைகளுக்காக  தரமானதும், குறைந்த கட்டணத்திலும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாகவும் கற்பிப்பதற்கான  ஒரு கல்விச் சேவையை வழங்குவதங்காக “வல்வைக்கல்வி மன்றம்” ஆரம்பிக்கப்பட்டது. அன்று வல்வெட்டித்துறை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சேவையில், கணித ஆசானாக தன்னை இணைத்துக் கொண்ட சிறிதரன் மாஸ்ரர், கடினமான பாடம் என்று பெரும்பாலான மாணவர்களால் வெறுக்கப்பட்டு வந்த கணித பாடத்தை மிக எளிய முறையில் கற்பித்து வந்ததால், கணிதத்தை விருப்புடன் கற்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைதான் சிறிதரன் மாஸ்ரரின் தனித்துவம். அவரால் கணித பாடம் கற்பிக்கப் பட்டபொழுது, கணித பாடம் இன்மையால் உயர்கல்வி கற்க முடியாத மாணவர்கள் என்று எவருமே இருக்கவில்லை.  சிறிதரன் மாஸ்ரரிடம் கணிதம் கற்கவேண்டு மென்பதற்காகவே வல்வைக் கல்வி மன்றத்திற்குக் கற்க வந்த மாணவர்கள் அதிகம்.

அவர் சாதாரணமான ஒரு ஆசிரியராக மடடும் இருக்கவில்லை. மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாடு களைப் பேணுவதில் அதிகளவில் அக்கறை எடுத்து வந்த காரணத் தினால், அவர்மீது மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் கூட ஒரு பயம் கலந்த மரியாதை இருந்து வந்தது. அவர் பாட்ததிலான விளக்கம் குறைந்த மாணவர்களை என்றுமே தண்டித்ததில்லை. அவ்வாறான மாணவர்களுக்குத் தனிமையில் கூட அழைத்து அவர்களுக்கான கணித பாடத்தை மிக எளிமையாகக் கற்பித்து வந்ததாலேயே, அவருடைய கணிதக் கற்பித்தல் மாணவர்களுக்குத் தேனாக இருந்தது. ஆனால் அதேவேளை ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறும் வகையில், வரம்பு மீறிச் செயற்படுகின்ற மாணவர்கள் மீது தண்டனையை வழங்கி அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளையும் அவர் எடுக்கத் தவறவில்லை. பாடசாலைகளிலோ அல்லது தனியார் கல்வி நிறுவனங்களிலோ ஒழுங்கு கட்டுப்பாட்டைப் பேணும் பொழுது தான் மிகச் சிறந்த கல்விப் பரம்பரையை உருவாக்கமுடியும் என்பதற்கு உயிர் கொடுத்து,கல்வியே மூச்சாகக் கொண்டு எமது பிள்ளைகளுக்காக வாழ்ந்த “சிறிதரன் மாஸ்ரரின்” உயிர் மூச்சு நிரந்தரமாகவே அடங்கிவிட்டதா?

வல்வைக் கல்வி மன்றம் 1978 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இந்த மண்ணின் கல்வி அபிவிருத்தியில் தடம் பதித்திருந்ததுடன் பல நூற்றுக்கணக்கான கல்வியாளர்களை உருவாக்கி, ஒரு உன்னதமான கல்விப் பரம்பரையை உருவாக்கிய ஒரு விருட்சமாகத் திகழ்ந்தமைக்கு “சிறிதரன் மாஸ்ரரின்” தன்னலமற்ற அரப்பணிப்பும்,மிக இறுக்கமான கட்டுப்பாடும் தான் காரணமென்பதை மறந்துவிடமுடியாது. 1990 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையினரால் எமது மண்ணும் மக்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பொழுது, சிறிதரன் மாஸ்ரரின் குடியிருந்த வீடும் தரைமட்டமாக்கப்பட்ட பொழுது, நிலை குலைந்து போனவரால் மீண்டும் பழைய நிலைக்கு அவரால் திரும்பமுடியாது போய்விட்டது. ஏற்கனவே 1986 ஆம் ஆண்டில் “வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்” தாக்குதலின் பொழுது காணாமல் போன அவரது ஒரே ஒரு ஆண்சகோதரனின் இழப்பும், வாழ்ந்த மனையின் இழப்பும் அவரைப் புலம் பெயர வைத்ததுடனனேயே எமது மண் நல்லதொரு கணித மேதையை இழந்திருந்தது.... ஆனால் அதுவே நிரந்தர இழப்பாக மாறிவிடும் என்றிருந்தால் ஊரே திரண்டு அவரது புலப் பெயர்வைத் தடுத்திருக்கும்...!

காலம் கனிந்து வரும்போது புலம் பெயர்ந்து சென்ற எமது மக்கள் எமது தாய்மண்ணில் அச்சமின்றி வந்து வாழும் நிலை ஒன்று உருவாகும் போது எமது தாயக மண்ணிலே மீண்டும் ஒரு கல்வி மறுமலர்ச்சியை வல்வைக் கல்வி மன்றத்தினூடாக ஏற்படுத்து வதற்காக, எங்களுடன் தோள்கொடுத்த எனது நண்பர்களான இராஜேந்திரா மாஸ்ரர் வருவார், சக்திவடிவேல் மாஸ்ரர் வருவார், குமார சிறிதரன் மாஸ்ரர் வருவார், தங்கவடிவேல் சேர் வருவார் என்று காத்திருந்த வேளையில் எங்கள் குழந்தைகளின் “ஆதர்ச கணித ஆசானாக” விளங்கிய குமாரசிறிதரன் மாஸ்ரர் மறைந்து விட்டார் என்பதை என்னால் இன்னுமொரு தடவை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

எமது இழப்புக்களின் துயரம் எம்மைப் பாதிக்கின்ற போதிலும், அதனால் நாங்கள் வீழ்ந்துகிடப்போமாயின், நாளை எமது மண்ணிலே கல்வி கற்ற நல்லொழுக்கமுள்ள ஒரு பரம்பரையின் உருவாக்கமும் கேள்விக்குறியாகவே மாறிவிடும்.... ஆம்..! அன்னாரது கல்விச் சேவை அவரது பெருமதிப்புக்கும் அன்புக்கும்  உரிய, அவரது மாணவர்களால் முன்னெடுக்கப்படுவதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.
எமது நண்பன் சிறிதரனின் மரணம் மாறாத ஒரு துயரத்தை எங்களுக்கு விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது.... அவரது பிரிவு அவரது குடும்பத்திற்குப் பேரிழப்பாக இருந்தாலும், எமது வல்வை மண்ணுக்கும், மக்களுக்கும் மிகப் பெரிய இழப்புமாகும். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரிகள், மைத்துணர்கள் மற்றும் அவரது மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து நீண்டதொரு பயணத்தைத் தொடரும் எமது குமார சிறிதரன் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

ஓம் சாந்தி.....ஓம் சாந்தி.....ஓம் சாந்தி....!

ந.அனந்தராஜ்,
முன்னாள் நிர்வாக இயக்குநர், வல்வைக் கல்வி மன்றம்
நகரபிதா, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்